India vs South Africa: முதல் ஓவரிலேயே கேப்டனின் விக்கெட்டை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட பும்ரா

By karthikeyan VFirst Published Dec 28, 2021, 4:07 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார் பும்ரா.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி, முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் அடித்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 60 ரன்கள் அடித்தார். புஜாரா ரன்னே அடிக்காமல் அவுட்டானார்.  கோலி 35 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடி சதமடித்தார் ராகுல்.  முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்திருந்தது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்றைய 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ராகுலும் ரஹானேவும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ராகுல் 123 ரன்களுக்கு ரபாடாவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரஹானே (48) மற்றும் ரிஷப் பண்ட் (8) ஆகியோரை லுங்கி இங்கிடியும், ரவிச்சந்திரன் அஷ்வின் (4) மற்றும் ஷர்துல் தாகூர் (4) ஆகிய இருவரையும் ரபாடாவும் வீழ்த்தினர். ஷமியை 8 ரன்னில் இங்கிடி வீழ்த்த, கடைசி விக்கெட்டாக பும்ராவை 14 ரன்னில் மார்கோ ஜான்சென் வீழ்த்த, இந்திய அணி 327 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும், அவருக்கு அடுத்தபடியாக ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் நாள் ஆட்டத்தில் ரபாடாவின் பவுலிங் சிறப்பாக இருந்தபோதிலும், அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் ராகுலை 123 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்த ரபாடா, அதன்பின்னர் அஷ்வின் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரையும் வீழ்த்தினார். 

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில், அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அதை செய்ய தவறிவிட்டனர். ஆனால் அவர்களுடன் ஒப்பிடுகையில், பும்ரா, சிராஜ், ஷமி என மிரட்டலான மற்றும் நல்ல கலவையிலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கொண்ட இந்திய அணியின் பவுலிங் யூனிட் சிறப்பானதுதான். எனவே தென்னாப்பிரிக்க பவுலர்களை போல இல்லாமல், அவர்கள் செய்யத்தவறியதை எல்லாம் செய்து இந்திய பவுலர்கள் மிரட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில், அதற்கு உரமூட்டும் விதமாக, முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கரை வெறும் ஒரு ரன்னில் வீழ்த்தி அனுப்பினார் பும்ரா. 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் அடித்துள்ளது. எய்டன் மார்க்ரமும், கீகன் பீட்டர்சனும் களத்தில் உள்ளனர்.

முன்னெப்போதையும் விட சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருப்பதால் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் இந்திய பவுலர்கள் பட்டையை கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!