இந்தியாவின் தோல்விக்கு சுப்மன் கில் டக் அவுட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ரன் அவுட் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இங்கிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை விளையாடி 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸில் ஆலி போப்பின் 196 ரன்கள் உதவியுடன் 420 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்த இந்திய அணியால் 2ஆவது இன்னிங்ஸில் 231 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்கள் குவித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் தலா 28 ரன்கள் எடுக்க, கேஎல் ராகுல் 22 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இதில் இந்திய அணியின் தோல்விக்கு சுப்மன் கில் டக் அவுட் ஆனதும், ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனதும் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 87 ரன்கள் குவித்த நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.