
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
வரும் 13ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்கவிருந்தது. 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவிருந்த நிலையில், இலங்கை அணியில் அடுத்தடுத்து 2 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, 17ம் தேதிக்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியது. அடுத்ததாக இந்திய்யாவுக்கு எதிராக ஆடவுள்ள நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் க்ராண்ட் ஃப்ளவருக்கு கொரோனா உறுதியானது. அவரைத்தொடர்ந்து, அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர்(Data Analyst) ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா உறுதியானதையடுத்து, குவாரண்டினை 3 நாட்கள் நீட்டித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். எனவே வரும் 13ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 17, 19, 21 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், ஜூலை 24, 25, 27 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.