குலசேகரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதியில் வென்று ஃபைனலில் இந்தியா லெஜண்ட்ஸை எதிர்கொள்ளும் இலங்கை

By karthikeyan VFirst Published Mar 19, 2021, 10:20 PM IST
Highlights

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி, ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. இந்தியா லெஜண்ட்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதி போட்டி இன்று நடந்தது.

இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் வான் விக்கை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.  அரைசதம் அடித்த வான் விக் 53 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் குலசேகரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

126 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் தில்ஷான் மற்றும் ஜெயசூரியா ஆகிய இருவருமே தலா 18 ரன்னில் ஆட்டமிழக்க, இலக்கு எளிதானது என்பதால் உபுல் தரங்கா நிதானமாக விக்கெட்டை இழந்துவிடாமல் நிலைத்து ஆட,  ஜெயசிங்கே அடித்து ஆடி வேகமாக இலக்கை எட்ட உதவினார். ஜெயசிங்கேவின் அதிரடியால் 18வது ஓவரில் இலக்கை எட்டி இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

ஃபைனலில் இந்தியா மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
 

click me!