ராகுல் டிராவிட் மனசு வைக்கலைனா அது சாத்தியமே இல்ல..! இலங்கை கிரிக்கெட் வாரியம் நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Aug 15, 2021, 9:21 PM IST
Highlights

ராகுல் டிராவிட் மனது வைக்கவில்லை என்றால் இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்க வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. ஆனால் டி20 தொடரில் தோல்வியடைந்தது. முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோற்றது. அதற்கு காரணம், இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பலரும் ஆடாததுதான்.

2வது டி20 போட்டிக்கு முன்பாக க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய முக்கியமான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்கள் யாருமே கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடவில்லை.

ஆனாலும் அந்த தொடரிலிருந்து விலக விரும்பாத இந்திய அணி, இருக்கிற வீரர்களை வைத்து சமாளித்து ஆடியது. கடைசி 2 டி20 போட்டிகளில் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடியது. ஆனால் அந்த 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இந்திய அணி.

முக்கியமான வீரர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டாலும், தொடரிலிருந்து விலகாமல் இந்திய அணி தொடர்ந்து ஆடியது குறித்து நெகிழ்ந்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அதற்கு அந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த இலங்கை கிரிக்கெட் வாரிய தரப்பு செய்திக்குறிப்பில், மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால், க்ருணல் பாண்டியா எபிசோடுக்கு பிறகும், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் குழு கொடுத்த ஒத்துழைப்புதான். ராகுல் டிராவிட் நினைத்திருந்தால், முழு தொடரையும் ஆடாமல் இந்தியா திரும்பியிருக்கலாம். ஆனால் வீரர்களை கொரோனாவிலிருந்து காக்க நாங்கள்(இலங்கை கிரிக்கெட் வாரியம்)  எடுத்த நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து முழு தொடரையும் ஆடச்செய்தார் ராகுல் டிராவிட் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
 

click me!