#ENGvsIND முக்கியமான நேரத்தில் கைகொடுக்கும் புஜாரா - ரஹானே..! சரிவிலிருந்து மீண்டுவரும் இந்தியா

By karthikeyan VFirst Published Aug 15, 2021, 8:29 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் விரைவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, புஜாரா மற்றும் ரஹானே ஆகிய சீனியர் வீரர்களின் பொறுப்பான பேட்டிங்கால் சரிவிலிருந்து மெதுவாக மீண்டுவருகிறது இந்திய அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார சதத்தால்(180*) 391 ரன்களை குவித்தது.

இந்த போட்டியின் 4ம் நாளான இன்று, இந்திய அணி 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(5) மற்றும் ரோஹித்(21) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் கோலிக்கு இருந்தது.

அதற்கேற்றாற்போல நன்றாக ஆடிய கோலி 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தபோதும், 20 ரன்களில் சாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணிக்கு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.

முதல் போட்டியிலும், 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் சரியாக ஆடாத அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும், சரியான நேரத்தில் பொறுப்பை உணர்ந்து, நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி 2வது செசன் முழுவதுமே விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.

புஜாரா-ரஹானே ஜோடி விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்த அதேவேளையில், ரன் வேகமும் மெதுவாக இருந்தது. 2வது செசன் முழுவதுமாக ஆடி 49 ரன்கள் மட்டுமே அடித்தனர். ரன் வேகம் மெதுவாக இருந்தாலும், இந்திய அணி இருந்த நிலைக்கு மேலும் ஒரு விக்கெட் விழுந்திருந்தால், அதன்பின்னர் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்து, இந்திய அணி மேலும் சிக்கலில் சிக்கியிருக்கலாம். அது நடக்காமல் தடுத்த வகையில், புஜாரா -  ரஹானே ஜோடியின் பேட்டிங் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது.
 

click me!