MI vs SRH: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொஞ்சநஞ்ச பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த சன்ரைசர்ஸ்

By karthikeyan VFirst Published May 17, 2022, 11:31 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, கொஞ்சநஞ்ச பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு பிளே ஆஃபிற்கு முன்னேறும் பின்புற வாய்ப்பு இருந்ததால் பெரிய வெற்றி தேவை என்ற கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. ஆனால் மும்பை அணி ஏற்கனவே பிளே ஆஃப் இழந்துவிட்டதால், இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் நெருக்கடி எதுவும் இல்லாமல் இறங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட்கீப்பர்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, ராமன் தீப் சிங், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவிட், சஞ்சய் யாதவ், டேனியல் சாம்ஸ், மயன்க் மார்கண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட்கீப்பர்), ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர், ஃபஸால் ஃபரூக்கி, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மாவும் பிரியம் கர்க்கும் இறங்கினர். அபிஷேக் ஷர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரியம் கர்க்கும் திரிபாதியும் இணைந்து அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய பிரியம் கர்க் 26 பந்தில்42 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த பூரனும் அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய திரிபாதி அரைசதம் அடிக்க, பூரன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். திரிபாதி 44 பந்தில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திரிபாதியும் பூரனும் ஆடியபோது சன்ரைரர்ஸின் ஸ்கோர் 210+ ரன்கள் அடிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த பின்னர், சன்ரைசர்ஸை 193 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மும்பை அணி.

194 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை 3  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி கொஞ்சநஞ்ச பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.

click me!