வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி:
டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், சைமன் ஹார்மெர், கேஷவ் மஹராஜ், ஜெரால்ட் கோயட்ஸீ, ககிசோ ரபாடா.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), டேக்நரைன் சந்தர்பால், ரேமன் ரைஃபர், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், கைல் மேயர்ஸ், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், குடகேஷ் மோட்டி.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் சிறப்பாக ஆடி 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார். எல்கர் 42 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் பேட்டிங் ஆடிய டோனி 85 ரன்கள் அடித்தார். டாப் 3 வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 320 ரன்களை குவித்தது.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி 81 ரன்களை குவித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 251 ரன்கள் அடித்தது.
69 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். பவுமா 172 ரன்களை குவிக்க,2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 321 ரன்களை குவித்தது.
IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா
தென்னாப்பிரிக்க அணி மொத்தமாக 390 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 391 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 284 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.