
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் சர்வதேச ஓய்விலிருந்து திரும்பிய குயின்டன் டி காக் மற்றும் காயத்திலிருந்து மீண்டு வந்த அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ரம், குயிடன் டி காக், டோனி டி சோர்ஸி, டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் டேவிட் மில்லர் உள்ளிட்ட வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. இதேபோல் ககிசோ ரபாடா, குவேனா மபாக்கா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி என்கிடி மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் வேகப்பந்துவீச்சு தாக்குதலை வலுப்படுத்துகின்றனர்.
கேசவ் மஹாராஜ் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பார், அவருக்கு ஜார்ஜ் லிண்டே ஆதரவளிப்பார். மார்க்ரம் மற்றும் ஃபெரேராவும் பார்ட் டைம் ஸ்பின்னர்கள் என்பதால் ஸ்பின்னர்களுக்கு பஞ்சமில்லை. டி20 உலகக்கோப்பைக்காக வலுவான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கபப்ட்டு இருந்தாலும் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரியான் ரிக்கெல்டன் மற்றும் பேட்டர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்சர் மன்னர்கள்
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரியான் ரிக்கெல்டனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் டிரிஸ்டன் ஸ்டப்ஸூம் இந்திய மண்ணில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்கவர்கள். சர்வசாதாரணமாக சிக்சர்களை பறக்கவிடக் கூடியவர்கள். ஆனால் சமீப காலமாக தென்னாப்பிரிக்கா அணிக்காக இவர்கள் இருவரும் சரியாக விளையாடாததால் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சரியாக செயல்படவில்லை
ரிக்கெல்டன் இந்த ஆண்டு T20 போட்டிகளில் சராசரியாகவே செயல்பட்டுள்ளார். ஐந்து இன்னிங்ஸ்களில் 118 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 23.60 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 132.58 ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 72 ரன்கள் அடித்துள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்த ஆண்டு ஏழு T20 போட்டிகளில் 152 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 21.71 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 121-க்கு மேல் உள்ளது. எதிர்பார்த்தபடி இருவரும் ரன்கள் சேர்க்காததால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.