ஹசரங்காவின் ஹாட்ரிக் வீண்..! கடைசி ஓவரில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மில்லர்.. தென்னாப்பிரிக்கா வெற்றி

By karthikeyan VFirst Published Oct 30, 2021, 7:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த போட்டியில் ஆடாத குயிண்டன் டி காக், நிறவெறிக்கு எதிராக மண்டியிட்டு கையை உயர்த்தி தனது குரலை பதிவு செய்ய ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த போட்டியில் அவர் ஆடினார். அவர் அணிக்குள்  நுழைந்ததால், ஹென்ரிச் கிளாசன் நீக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர் டசன், எய்டன் மார்க்ரம், ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.

இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இலங்கை அணி ஆடியது.

இலங்கை அணி:

குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரராக, டி20 உலக கோப்பையில் ஜொலித்துவரும் அசலங்காவும் 21 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அதன்பின்னர் ராஜபக்சா(0), அவிஷ்கா ஃபெர்னாண்டோ(3), வனிந்து ஹசரங்கா(4), கேப்டன் தசுன் ஷனாகா(11), சாமிகா கருணரத்னே(5) ஆகிய அனைவரும் சொற்ப ரன்களுக்கு தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் நிசாங்கா நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். தனிநபராக ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆடிய நிசாங்காவிற்கு மறுமுனையில் எந்த வீரரும் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக உயரவில்லை. பொறுப்புடன் ஆடிய நிசாங்கா 58 பந்தில் 72 ரன்கள் அடித்து 19வது ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 142 ரன்கள் அடித்தது இலங்கை அணி.

143 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் முதல் 3 வீரர்களான குயிண்டன் டி காக்(12), ரீஸா ஹென்ரிக்ஸ்(11), வாண்டர் டசன்(16) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் கேப்டன் டெம்பா பவுமாவுடன் இணைந்து நன்றாக ஆடிய மார்க்ரமும் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பவுமாவுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். கடைசி 3 ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18வது ஓவரை துணிச்சலாக ஸ்பின்னர் ஹசரங்காவிடம் கொடுத்தார் கேப்டன் தசுன் ஷனாகா.

தன் மீது கேப்டன் வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல், 18வது ஓவரின் முதல் 2 பந்துகளில் டெம்பா பவுமா(46) மற்றும் ப்ரிட்டோரியஸ்(0) ஆகிய இருவரையும் வீழ்த்தினர். ஹசரங்கா 18வது ஓவருக்கு முன் அவர் வீசிய கடைசி ஓவரான 15வது ஓவரின் கடைசி பந்தில் மார்க்ரமை வீழ்த்திய ஹசரங்கா, 18வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் பவுமா மற்றும் ப்ரிட்டோரியஸ் ஆகிய இருவரையும் வீழ்த்தி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரை துஷ்மந்தா சமீரா 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை அணியின் லஹிரு குமாரா அந்த கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ரபாடா சிங்கிள் எடுக்க, அடுத்த 2 பந்திலும் சிக்ஸர் விளாசிய மில்லர், 4வது பந்தில் சிங்கிள் அடித்தார். 5வது பந்தில் ரபாடா பவுண்டரி அடித்து போட்டியை முடித்துவைத்தார். 19வது ஓவர் வரை இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்த போட்டியை, கடைசி ஒரே ஓவரில் தலைகீழாக மாற்றினார் மில்லர். நீண்டகாலத்திற்கு பிறகு மில்லர் அதிரடியாக ஆடி போட்டியை தென்னாப்பிரிக்காவுக்காக வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். 

இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 
 

click me!