New Zealand vs South Africa: 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..! தொடர் சமன்

Published : Mar 01, 2022, 03:24 PM IST
New Zealand vs South Africa: 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..! தொடர் சமன்

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, தொடரை 1-1 என சமன் செய்தது.  

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது.

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எர்வீ  அபாரமாக விளையாடி சதமடித்தார். சதத்திற்கு பின் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்க்ரம் 42 ரன்களும், எல்கர் 41 ரன்களும் அடித்தனர். மார்கோ ஜான்சென் 37 ரன்களும், மஹராஜ் 36 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 364 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியில் காலின் டி கிராண்ட் ஹோம் மட்டும்தான் சிறப்பாக ஆடினார். அதிரடியாக விளையாடி சதமடித்த கிராண்ட் ஹோம் 120 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. டேரைல் மிட்செல் 60 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் அடித்தது.

71 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் இம்முறை கைல் வெரெய்ன் சதமடித்தார். 136 ரன்கள் அடித்து கடைசி வரை வெரெய்ன் ஆட்டமிழக்கவில்லை. ரபாடா பின்வரிசையில் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 354 ரன்கள் அடித்தது.

மொத்தமாக 425 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 426 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 426 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, 227 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே அதிகபட்சமாக 92 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சோபிக்காததால் 227 ரன்களுக்கு நியூசிலாந்து அணி சுருண்டது.

198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1-1 என தொடரை சமன் செய்தது. சொந்த மண்ணில் 198 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது நியூசிலாந்து அணி.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!