டி20 கிரிக்கெட்டில் கோலி எந்த வரிசையில் ஆட வேண்டும்? ஆஸி., முன்னாள் வீரர் தேர்வு செய்த இந்திய பேட்டிங் ஆர்டர்

By karthikeyan VFirst Published Feb 28, 2022, 10:25 PM IST
Highlights

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த பேட்டிங் ஆர்டரில் ஆடலாம் என்று ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார்.
 

2022ம் ஆண்டு (இந்த ஆண்டு) ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் தீவிரமாக தயாராகிவருகிறது. அதற்காக, பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பல வீரர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடாததால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தனக்கான இடத்தை பிடிக்க மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்த ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக விளையாடினார்.

முதல் டி20 போட்டியில் 28 பந்தில் 57* ரன்கள், 2வது டி20 போட்டியில் 44 பந்தில் 74* ரன்கள், 3வது டி20 போட்டியில் 45 பந்தில் 73* ரன்கள் என்ற 3 டி20 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு போட்டியில் கூட அவுட் ஆகவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவுட்டே ஆகாமல் 3 அரைசதம் அடித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரான 3ம் வரிசையில் இறங்கி, 3 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடி தன்னை புறக்கணிக்கமுடியாதபடி முத்திரை பதித்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியின் சாதனையையும் முறியடித்தார்.

விராட் கோலியும் சூர்யகுமாரும் அணிக்குள் வந்துவிட்டால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விராட் கோலி ஓபனிங்கில் இறங்கினால் ஷ்ரேயாஸ் ஐயர் 3ம் வரிசையில் ஆட வாய்ப்பு கிடைக்கும். 

அதைத்தான் ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் வலியுறுத்தியுள்ளார். விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய பிராட் ஹாக், என்னை பொறுத்தமட்டில் விராட் கோலி ரோஹித்துடன் ஓபனிங்கில் இறங்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் 3ம் வரிசையில் ஆடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ரிஷப் பண்ட் அல்லது கேஎல் ராகுலை 4 அல்லது 5ம் வரிசைகளில் ஆட்டத்தின் சூழலுக்கேற்ப இறக்கலாம். ஹர்திக் பாண்டியா ஃபிட்டாகிவிட்டால், அவரை 6ம் வரிசையிலும், ஜடேஜாவை 7ம் வரிசையிலும் ஆடவைக்கலாம் என்று பிரட் ஹாக் தெரிவித்துள்ளார்.
 

click me!