
கடந்த 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல், சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. அந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
ரோஹித்தின் கேப்டன்சியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளையும் ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்றது இந்திய அணி.
டி20 உலக கோப்பைக்கான தயாரிப்பில் இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்துவருகிறது. பேட்டிங்கில் ஒரு இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பவுலிங்கில் ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. பும்ரா மட்டும்தான் நிரந்தர ஃபாஸ்ட் பவுலர். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக தீபக் சாஹர் எடுக்கப்படுவார். இந்திய அணியில் ஒரு இடது கை ஃபாஸ்ட் பவுலருக்கான இடம் இருப்பதாகவும், அந்த இடத்திற்கு 3 இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடையே போட்டி நிலவுவதாகவும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், இந்திய அணியில் ஏற்கனவே இருக்கும் ஃபாஸ்ட் பவுலர்களுடன், இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஒருவருக்கான போட்டியும் உள்ளது. கலீல் அகமது, நடராஜன், சேத்தன் சக்காரியா ஆகிய 3 இடது கை பவுலர்களில் ஐபிஎல்லில் யார் சிறப்பாக பந்துவீசும் ஒருவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும். இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எப்போதுமே அணியில் இடம் இருக்கிறது. Left always right என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.