கிளாசன் அதிரடி சதம்.. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 1, 2020, 10:01 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. அந்த தொடரில் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரை வென்றது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஹென்ரிச் கிளாசனின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 291 ரன்களை குவித்தது. 

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டி காக்கும் மாலனும் களமிறங்கினர். மாலன் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து கேப்டன் டி காக் 15 ரன்களிலும் பவுமா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கைல் வெரெய்னும் ஹென்ரிச் கிளாசனும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 78 ரன்களை சேர்த்தனர். வெரெய்ன் 48 ரன்களில் அவுட்டாக, அதன்பின்னர் கிளாசனுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். 

ஒருமுனையில் கிளாசன் கிளாசாக ஆட, மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார் மில்லர். அதிரடியாக ஆடிய கிளாசன் சதமடித்தார். மில்லர் 70 பந்தில் 64 ரன்கள் அடித்து 49வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபெலுக்வாயோ, கேஷவ் மஹாராஜ் ஆகியோர் களத்திற்கு வந்ததும் சென்றனர். ஆனால் கிளாசனின் அதிரடியான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 291 ரன்களை குவித்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, களத்தில் நிலைத்தபின்னர் கிளாசன் சிறப்பாக ஆடி சதமடித்தார். 114 பந்தில் 123 ரன்களை குவித்து கடைசி வரை கிளாசன் ஆட்டமிழக்கவில்லை. 

இதையடுத்து 292 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் வார்னரை லுங்கி இங்கிடி களத்தில் நிலைக்கவிடவில்லை. ஃபின்ச்சை 10 ரன்களிலும் வார்னரை 25 ரன்களிலும் இங்கிடி வீழ்த்தினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மிகச்சிறந்த 2 பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித்தும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தனர். லபுஷேன் 41 ரன்களில் அவுட்டாக, மிட்செல் மார்ஷ் 16 ரன்களில் நடையை கட்டினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ஸ்மித்தும் 76ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி, டார்ஷி ஷார்ட், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் மளமளவென அவுட்டாக, அந்த அணி 45.1 ஓவரில் 217 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

Also Read - சச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..? மெக்ராத்தின் நெற்றியடி பதில்

இதையடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!