2வது டெஸ்ட்: அடித்ததை விட குறைந்த ரன்னில் நியூசிலாந்தை சுருட்டிய இந்தியா.. ஷமி, பும்ரா அசத்தல் பவுலிங்

By karthikeyan VFirst Published Mar 1, 2020, 9:27 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அடித்த ஸ்கோரை விட, 7 ரன்கள் குறைவாகவே நியூசிலாந்தை சுருட்டியது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததை அடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, புஜாரா ஆகியோரின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் அடித்தது. 

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால், இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, அரைசதம் அடித்தார். ஆனால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 64 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால், விராட் கோலி, ரஹானே ஆகிய மூவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். புஜாராவும் ஹனுமா விஹாரியும் இணைந்து சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். 

இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தி கொண்டிருந்தனர். கடந்த போட்டியில் மந்தமாக ஆடியதாக விமர்சிக்கப்பட்ட ஹனுமா விஹாரி, இந்த போட்டியில் அதிரடியாக ஆடினார். ஆனால் அதிரடியை கட்டுப்பாட்டுடன் ஆடாமல் தொடர்ச்சியாக அடித்து ஆட முயன்ற அவர், 55 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து புஜாராவும் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். விஹாரி அவுட்டான அடுத்த 48 ரன்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதமும் டாம் பிளண்டெலும் இணைந்து சிறப்பாக ஆடினர். முதல் நாள் ஆட்டத்தை விக்கெட்டை இழக்காமல் முடித்தனர். இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே டாம் பிளண்டெலை உமேஷ் யாதவ் 30 ரன்களுக்கு வீழ்த்தினார். அதன்பின்னர் வில்லியம்சன் 3 ரன்களிலும் ரோஸ் டெய்லர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டாம் லேதமை 52 ரன்களில் ஷமி வீழ்த்தினார். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். டிம் சௌதியை இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. 

அந்த அணி 177 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஜேமிசனும் நீல் வாக்னரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஜேமிசன்  பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்தார். ஜேசமினும் வாக்னரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தனர். வாக்னரை 21 ரன்களில் வீழ்த்தி இந்த ஜோடியை பிரித்த ஷமி, கடைசி விக்கெட்டாக ஜேமிசனையும் 49 ரன்களில் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

Also Read - சச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..? மெக்ராத்தின் நெற்றியடி பதில்

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி ஆரம்பத்திலேயே மயன்க் அகர்வாலின் விக்கெட்டை இழந்துவிட்டது. பிரித்வி ஷாவும் புஜாராவும் இணைந்து ஆடிவருகின்றனர். 
 

click me!