எப்பலாம் தேவையோ அப்பலாம் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்த அஷ்வின்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்திய அணி

By karthikeyan VFirst Published Oct 12, 2019, 4:55 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் வெறும் 275 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. 
 

புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். புஜாரா 58 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கேப்டன் விராட் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நான்காவது விக்கெட்டுக்கு 178 ரன்களை குவித்தனர். 

அரைசதம் அடித்த ரஹானே 59 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அபாரமாக ஆடிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா 91 ரன்களில் அவுட்டாக, 601 ரன்களில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்திய அணி. 

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் மற்றும் எல்கர் ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவின் முதல் 2 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பவுமா ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்த தென்னாப்பிரிக்க அணியின் டி ப்ருய்னும் நைட் வாட்ச்மேன் நோர்ட்ஜேவும் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். 

நோர்ட்ஜேவை ஷமி வீழ்த்த, டி ப்ருய்னை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணி 53 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கேப்டன் டுப்ளெசிஸும் டி காக்கும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடியை ஃபாஸ்ட் பவுலர்களால் பிரிக்கமுடியாத சூழலில், டி காக்கை கிளீன் போல்டாக்கி பிரேக் கொடுத்தார் அஷ்வின். 

அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் ஜோடி சேர்ந்த முத்துசாமியை ஜடேஜா 7 ரன்களில் வீழ்த்தினார். அரைசதம் அடித்து தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டுப்ளெசிஸை 64 ரன்களில் வீழ்த்தி அடுத்த பிரேக்கை கொடுத்தார் அஷ்வின். 

162 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஃபிளாண்டரும் கேசவ் மஹாராஜும் இந்திய அணியை மண்டை காயவிட்டனர். 9வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 109 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடிய கேசவ் மஹாராஜ் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்த மஹாராஜை 72 ரன்களில் வீழ்த்தி அடுத்த பிரேக்கை கொடுத்தார் அஷ்வின். கடைசியாக ரபாடாவையும் அஷ்வினே வீழ்த்தினார். 

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும் அஷ்வின் அபாரமாக பந்துவீசி, இந்திய அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார். தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பதால், தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தால், இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. 
 

click me!