ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் இரட்டை சதமடித்து சாதனை.. ஒரே நாளில் கிரிக்கெட் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த சாம்சன்

By karthikeyan VFirst Published Oct 12, 2019, 4:09 PM IST
Highlights

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரேவில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன். 

மிகத்திறமையான வீரராக இருந்தும் கூட இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவரும் வீரர்களில் சஞ்சு சாம்சன் முதன்மையானவர். கவுதம் கம்பீர் அடிக்கடி சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறுவதுண்டு. உலக கோப்பை சமயத்தில் இந்திய அணியில் நான்காம் வரிசை பிரச்னை இருந்தபோது கூட, சாம்சனை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கம்பீர் தெரிவித்திருந்தார். 

கம்பீர் சும்மா அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அந்தளவிற்கு திறமையான வீரர் சாம்சன். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கோவா அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் மூன்றாம் வரிசையில் இறங்கிய சஞ்சு சாம்சன், அபாரமாக ஆடி இரட்டை சதமடித்துள்ளார். 129 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 212 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சச்சின் பேபியும் சதமடித்தார். இவர்கள் இருவரின் அபாரமான பேட்டிங்கால் கேரளா அணி 50 ஓவரில் 377 ரன்களை குவித்தது. 

சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் இரட்டை சதமடித்ததன் மூலம் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதமடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கௌஷால் ஆகியோருக்கு அடுத்து லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இவர்களில் சச்சின், சேவாக், ரோஹித் ஆகிய மூவரும் சர்வதேச போட்டியில் இரட்டை சதமடித்தவர்கள். 

அதுமட்டுமல்லாமல் விஜய் ஹசாரேவில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக உத்தரகண்ட் வீரர் கௌஷால் அடித்த 208 ரன்கள் தான் விஜய் ஹசாரே தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!