ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்வது உறுதி என்று முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த டெஸ்ட் தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தி ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் என்பதால் இது முக்கியமான தொடர் ஆகும்.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்ஃபி, குன்னெமன் ஆகிய ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ளவும் தீவிர பயிற்சி எல்லாம் செய்தனர். அதனால் இந்திய கண்டிஷனில் வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி கடும் சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஆஸ்திரேலிய அணியோ இந்தியாவிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கியது.
IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 2ம் இடத்தை வலுவாக பிடித்துள்ளது. அடுத்த டெஸ்ட்டிலும் ஜெயித்தால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி சோபிக்கமுடியாமல் சொதப்பிவரும் நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட், அஷ்டான் அகர் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்கான எஞ்சிய 2 போட்டிகளுக்கான அணியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்திய அணி, அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதால் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யக்கூட வாய்ப்புள்ளது. 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதால் இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்ட நிலையில், அந்த அணி இந்த தொடரை சமன் செய்யவோ அல்லது ஒயிட்வாஷ் ஆகாமல் தடுக்கவோ தான் முடியும். ஆனால் இப்போது ஆஸ்திரேலிய அணி இருக்கும் நிலையில் அதற்கு சாத்தியமே இல்லை.
இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்துவிடும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சௌரவ் கங்குலி, இந்தியா 4-0 என இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்கும். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்துவது மிகக்கடினம். இந்திய கண்டிஷனில் இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்துமே தவிர, இந்திய அணி மீது எந்த அணியும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.