IPL Auction 2022: இனிமேல் நீங்கலாம் வேலைக்கு ஆகமாட்டீங்க..! விலைபோகாத ரெய்னா.. ஐபிஎல் லெஜண்டுக்கு வந்த சோதனை

Published : Feb 12, 2022, 03:29 PM IST
IPL Auction 2022: இனிமேல் நீங்கலாம் வேலைக்கு ஆகமாட்டீங்க..! விலைபோகாத ரெய்னா.. ஐபிஎல் லெஜண்டுக்கு வந்த சோதனை

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான முதற்கட்ட மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய நான்கு பெரிய வீரர்களும் விலைபோகவில்லை.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், வனிந்து ஹசரங்காவை ஏலம் விட்டுக்கொண்டிருந்தபோது, ஏலதாரர் ஹியூக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த ஹியூக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை சீரடைந்துவிட்டதால் பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்குகிறது.

இன்றைய ஏலம் இதுவரை நடந்தவரையில், ஷ்ரேயாஸ் ஐயரை அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. ஹர்ஷல் படேலை ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபி அணியும், ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணியும் எடுத்தன.

நிதிஷ் ராணா ரூ.8 கோடிக்கும்(கேகேஆர்), டிரெண்ட் போல்ட் ரூ.8 கோடிக்கும்(ராஜஸ்தான் ராயல்ஸ்),தேவ்தத் படிக்கல் ரூ.7.75 கோடிக்கும் (ராஜஸ்தான் ராயல்ஸ்), பாட் கம்மின்ஸ் ரூ.7.25 கோடிக்கும் (கேகேஆர்) விலைபோனார்கள்.

மேற்கூறிய சிறந்த வீரர்கள் நல்ல தொகைக்கு விலைபோன அதேவேளையில், ஐபிஎல்லில் கடந்த காலங்களில் பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்த ரெய்னா விலைபோகவில்லை. 

ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட சுரேஷ் ரெய்னாவை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையும்,  மேட்ச் வின்னருமான ரெய்னாவை அடிப்படை விலைக்கு எடுக்க சிஎஸ்கே அணி கூட ஆர்வம் காட்டவில்லை. சிஎஸ்கே அணி தடையில் இருந்த 2 சீசன்களை தவிர, 2008லிருந்து மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ரெய்னா. சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் அவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. ஐபிஎல்லில் 205 போட்டிகளில் ஆடி 5528 ரன்களை குவித்துள்ள ரெய்னா, ஐபிஎல்லில் நீண்டநெடிய அனுபவம் கொண்ட சிறந்த வீரர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல்லிலும் சரியாக ஆடுவதில்லை. அவரது உடல் எடை அதிகரித்ததுடன், முன்புபோல் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஐபிஎல் லெஜண்ட் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போதைய சூழலில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத அவரால் ஐபிஎல்லில் முன்புபோல் சிறப்பாக விளையாடமுடியாது என்பதால் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.

அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டரான ஸ்டீவ் ஸ்மித், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், தென்னாப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனும் ஐபிஎல்லின் முன்னாள் நட்சத்திர வீரருமான டேவிட் மில்லர் ஆகியோரும் விலைபோகவில்லை. இதுவரை நடந்த ஏலத்தில் ரெய்னா, ஸ்மித், ஷகிப் அல் ஹசன் மற்றும் மில்லர் ஆகிய நால்வரையும் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் ஒவ்வொரு அணியிடம் இருக்கும் கையிருப்பு தொகையை பொறுத்து, இந்த வீரர்களை எடுக்க வாய்ப்புள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!