ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையிலிருந்து விமானம் மூலமாக ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாள், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா உள்பட 20 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இதில் அரையிறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தகுதி பெற்றன. கடைசியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை வென்று புதிய வரலாற்று சாதனை படைத்தது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஆரம்பமாக இருக்கிறது. ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
சுப்மன் கில் தவிர, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த தொடருக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6 ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 14 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று மும்பையிலிருந்து விமானம் மூலமாக ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களில் ஷிவம் துபே இன்னும் ஜிம்பாப்வே செல்லவில்லை. அவர் பார்படாஸில் சிக்கியுள்ள நிலையில் இன்னும் இந்தியா திரும்பவில்லை. பார்படாஸில் பெர்லி புயல் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இன்னும் பார்படாஸிலேயே தக்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் இன்று தனி விமானம் மூலமாக தாயகம் திரும்ப வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஜூலை 6 – ஜிம்பாப்வே – இந்தியா – முதல் டி20 – ஹராரே – மாலை 4.30 மணி
ஜூலை 7 – ஜிம்பாப்வே – இந்தியா – 2ஆவது டி20 – ஹராரே – மாலை 4.30 மணி
ஜூலை 10 - ஜிம்பாப்வே – இந்தியா – 3ஆவது டி20 – ஹராரே – மாலை 4.30 மணி
ஜூலை 13 - ஜிம்பாப்வே – இந்தியா – 4ஆவது டி20 – ஹராரே – மாலை 4.30 மணி
ஜூலை 14 - ஜிம்பாப்வே – இந்தியா – 5ஆவது டி20 – ஹராரே – மாலை 4.30 மணி
இந்த போட்டி முழுவதும் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், சோனிலைவ் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் லைவ் ஸ்டிரீம் செய்யப்படுகிறது.