ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷாகில் அல் ஹசன் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தவ்ஹீத் ஹிரிடோய் 54 ரன்களும், நசும் அகமது 44 ரன்களும் சேர்த்தனர்.
BAN vs IND, Shubman Gill: விராட் கோலியின் சதம் சாதனையை முறியடித்த இளவரசன் சுப்மன் கில்!
பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும், பிரஷித் கிருஷ்ணா, அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 266 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் ஆடியது.
இதில், ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 14ஆவது முறையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒருபுறம் சுப்மன் கில் மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்க்க, மறுபுறம் வந்த வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமான திலக் வர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் ஆட்டமிழக்கவே, ரவிந்திர ஜடேஜா 7 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அக்ஷர் படேல் களமிறங்கினர். இந்த நிலையில், தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய சுப்மன் 9 ஆவது அரைசதம் அடித்த நிலையில், அதனை சதமாகவும் மாற்றினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு இந்த ஆண்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், 2023ல் அதிக முறை சதம் அடித்த விராட் கோலியின் 5 சதங்கள் (22 இன்னிங்ஸ்) சாதனையை சுப்மன் கில் இந்தப் போட்டியில் 6ஆவது சதம் (36 இன்னிங்ஸ்) அடித்ததன் மூலமாக முறியடித்துள்ளார். இவ்வளவு ஏன், இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (5 போட்டிகளில் 275 ரன்கள்) குவித்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 5 போட்டிகளில் 253 ரன்கள் குவித்து 2ஆவது இடத்தில் உள்ளார். சதீர சமரவிக்ரமா 215 ரன்கள் உடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.