பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு

By karthikeyan VFirst Published Mar 16, 2023, 4:45 PM IST
Highlights

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை தகர்ப்பார் என்றும், 110 சதங்கள் விளாசுவார் என்றும் ஷோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019ம் ஆண்டு நவம்பருக்கு பின் சுமார் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் இருந்துவந்தார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சதமடித்து அந்த குறையையும் தீர்த்தார். 186 ரன்களை குவித்து அசத்தினார்.

IPL 2023: தளபதி பாடலுக்கு கிடார் வாசித்த தல தோனி..! சிஎஸ்கே கேம்ப்பில் செம கச்சேரி.. வைரல் வீடியோ

இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்தார். விராட் கோலி மீண்டும் சதங்களையும் சாதனைகளையும் குவிக்க தொடங்கிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என மொத்தமாக 75 சதங்களை விளாசி 2ம் இடத்தில் உள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் என்ற சாதனையை தகர்ப்பாரா மாட்டாரா என்று பேசப்பட்டுவரும் நிலையில், கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சச்சின் பயங்கரமான மூளைக்காரர்.. அவரை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கே எதிராக திரும்பியது.! சக்லைன் முஷ்டாக் வருத்தம்

இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்து சதங்கள் விளாச ஆரம்பித்துவிட்டார். எந்த அழுத்தமும் இல்லாமல் ஆட ஆரம்பித்துவிட்டதால், இனி அவரது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவார். எனவே சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை கண்டிப்பாக தகர்த்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் கண்டிப்பாக 110 சதங்களை விராட் கோலி விளாசுவார். கேப்டன்சி அழுத்தமும் இல்லாததால் இனிமேல் பீஸ்ட் மோடில் ஆடுவார் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

click me!