என் காலத்துல ஸ்மித் ஆடியிருந்தா இப்படித்தான் வீழ்த்தியிருப்பேன் - அக்தர்

By karthikeyan VFirst Published Nov 7, 2019, 5:12 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஸ்மித் திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் கோலிக்கு நிகராக சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த ஸ்மித்தின் கிரிக்கெட் கெரியரில், பந்தை சேதப்படுத்தியதன் விளைவாக, ஓராண்டு காலம் பிரேக் விழுந்தது. 
 

தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித், தான் விட்ட இடத்திலிருந்து சாதனை பயணத்தை தொடர்கிறார். முன்பைவிட இப்போது இன்னும் சிறப்பாக ஆடி அசத்திவருகிறார். ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 774 ரன்களை குவித்தார். ஸ்மித்தை அவுட்டாக்குவதே இங்கிலாந்து அணிக்கு கடும் போராட்டமாக அமைந்தது. 

ஆஷஸ் தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். ஆஷஸ் தொடரில் அசத்திய ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் அசத்திவருகிறார். ஸ்மித் சிறந்த டி20 வீரர் கிடையாது என்று விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக அமைந்தது, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவரது பேட்டிங். 

அந்த போட்டியில் பல அபாரமான மற்றும் அசாத்தியமான ஷாட்டுகளை ஆடி அசத்தினார் ஸ்மித். ஸ்மித்தை வீழ்த்துவதே எதிரணி பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், தான் ஆடிய காலத்தில் ஸ்மித் ஆடியிருந்தால் அவரை எப்படி வீழ்த்தியிருப்பேன் என்று அக்தர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், ஸ்மித் எப்படி இப்படி ஆடுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. மிகச்சிறந்த வீரர் அவர். அவர் மட்டும் நான் ஆடிய காலத்தில் ஆடியிருந்தால், முகத்திலேயே 3-4 அடிகள் கொடுத்து அவரை துன்புறுத்தியிருப்பேன். ஆனால் அது ரொம்ப கஷ்டம். ஏனெனில் ஸ்மித்தின் கவனத்தை சிதறடிப்பது நடக்காத காரியம். ஸ்மித் வேற லெவலில் அபாரமாக ஆடுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தடைக்கு பிறகு ஸ்மித், ரன்களை தாறுமாறாக குவித்துவருகிறார். அவர் சிறந்த டி20 வீரர் இல்லை என்று விமர்சித்தவர்களுக்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் என்று ஸ்மித்தை புகழ்ந்து தள்ளினார் அக்தர். 
 

click me!