
ரஞ்சி தொடர் இறுதிகட்டத்தை நெருங்குகிறது. சௌராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகளும் அரையிறுதியில் ஆடிவருகின்றன.
கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
சௌராஷ்டிரா அணி:
அர்பிட் வசவடா (கேப்டன்), சேத்தன் சக்காரியா, சிராக் ஜானி, தர்மேந்திரசின்ஹா ஜடேஜா, ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), குஷாங் படேல், பார்த் பட், ப்ரெராக் மன்கத், ஷெல்டான் ஜாக்சன், ஸ்னெல் படேல், விஷ்வராஜ் ஜடேஜா.
கர்நாடகா அணி:
தேவ்தத் படிக்கல், கிருஷ்ணப்பா கௌதம், வாசுகி கௌஷிக், மனீஷ் பாண்டே, மயன்க் அகர்வால் (கேப்டன்), நிகின் ஜோஸ், ஸ்ரீநிவாஸ் ஷரத் (விக்கெட் கீப்பர்), ரவிகுமார் சமர்த், ஷ்ரேயாஸ் கோபால், விஜய்குமார் வைஷாக், வித்வாத் காவெரப்பா.
முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் ஒருமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆட, மறுமுனையில் சமர்த் (3), தேவ்தத் படிக்கல்(9), நிகின் ஜோஸ்(13), மனீஷ் பாண்டே(7), ஷ்ரேயாஸ் கோபால்(15) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மறுமுனையில் ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஷரத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஷரத் 66 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதமடித்தார். 429 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 249 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது கர்நாடகா அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஸ்னெல் படேல் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 33 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய விஷ்வராஜ் ஜடேஜா 22 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் 4 மற்றும் 5ம் வரிசைகளில் இறங்கிய ஷெல்டான் ஜாக்சன் மற்றும் அர்பிட் வசவாடா ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் அடி இருவருமே சதமடித்து, 4வது விக்கெட்டுக்கு 232 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி 160 ரன்களை குவித்த ஷெல்டான் ஜாக்சன் இரட்டை சதமடிக்காமல் ஆட்டமிழந்தார்.
3ம் நாள் ஆட்ட முடிவில் சௌராஷ்டிரா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்களை குவித்துள்ளது. வசவாடா 112 ரன்களுடனும் சிராக் ஜானி 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.