பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து பாபர் அசாம் விலகவேண்டும் என்று ஷாஹித் அஃப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக பாபர் அசாம் இருக்கிறார். 3 ஃபார்மட்டுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் இருந்துவருகிறார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் பட்டியலில் பாபர் அசாமும் இணைந்துவிட்டார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் பாபர் அசாம், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகள் உட்பட பல சாதனைகளை தகர்த்துவந்த நிலையில், அண்மைக்காலமாக டி20 கிரிக்கெட்டில் அவர் சரியாக பேட்டிங் ஆடவில்லை.
ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 மிகப்பெரிய தொடர்களிலும் பாபர் அசாம் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. டி20 உலக கோப்பையில் ஒரு அரைசதம் உட்பட மொத்தமாகவே 134 ரன்கள் மட்டுமே அடித்தார். பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் பேட்டிங்கை அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில், அவர் பேட்டிங்கில் சோபிக்காதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
கேப்டன்சி அழுத்தம் அவரது பேட்டிங்கை பாதிப்பதாக கருதும் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, அவரை டி20 கேப்டன்சியிலிருந்து மட்டும் விலகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷாஹித் அஃப்ரிடி, பாபர் அசாம் டி20 கேப்டன்சியிலிருந்து விலகி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன்சியிலும் பேட்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும். பாபர் அசாம் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனவே தான் அவருக்கு டி20 கேப்டன்சி அழுத்தம் வேண்டாம் என்பதற்காக இதை கூறுகிறேன். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன்சியிலும் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தலாம். ஷதாப் கான், ரிஸ்வான், ஷான் மசூத் ஆகிய மூவரில் ஒருவரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று அஃப்ரிடி கூறியுள்ளார்.