ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று ஆல்ரவுண்டராக அவரை உருவாக்குங்க..! இந்திய அணிக்கு முன்னாள் தேர்வாளரின் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Jun 28, 2021, 8:08 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூரை வளர்த்தெடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணிக்கு கபில் தேவுக்கு அடுத்த சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பை அளிக்கக்கூடிய வீரர் ஹர்திக் பாண்டியா.

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் 2018 ஆசிய கோப்பையின்போது, முதுகுப்பகுதியில் அடைந்த காயத்திற்கு பிறகு, இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார் ஹர்திக் பாண்டியா. அதற்கு காரணம் அவர் பந்துவீசாததுதான். 

ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவரது அவர் பந்துவீசவைக்கப்படுவதில்லை. பந்துவீசாததால் அவர் அணியில் எடுக்கப்படுவதுமில்லை. அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. 

பாண்டியா இல்லாததால் ஆல்ரவுண்டர் இடத்தை பூர்த்தி செய்ய ஸ்பின் ஆல்ரவுண்டரை அணியில் எடுத்தனர். ஆனால் சவுத்தாம்ப்டன் கண்டிஷனில் ஸ்பின் எடுபடாததால் அணி காம்பினேஷன் சரியானதாக அமையவில்லை. அதே அந்த ஸ்பின் ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மாதிரியான ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இருந்திருந்தால் உதவிகரமாக இருந்திருக்கும்.

அந்தவகையில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூரை தயார் செய்யலாம் என்று கூறியுள்ளார் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சரண்தீப் சிங், ஹர்திக் பாண்டியாவை மட்டுமே சார்ந்தோ நம்பியோ இருக்கமுடியாது. அவர் அனைத்து ஃபார்மட்டுகளிலும் பந்துவீசுமளவிற்கு எப்போது ஃபிட் ஆவார் என்று தெரியவில்லை. எனவே அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மாதிரியான ஒரு வீரரை ஆல்ரவுண்டராக வளர்த்தெடுக்க வேண்டும். விஜய் சங்கர், ஷிவம் துபே ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்களையும் பரிசீலிக்கலாம் என்று சிங் தெரிவித்தார்.
 

click me!