தோனி ஓய்வு விஷயத்தில் பிசிசிஐ தோற்றுவிட்டது..! மனதில் பட்டதை துணிச்சலாக பேசிய சக்லைன் முஷ்டாக்

By karthikeyan VFirst Published Aug 24, 2020, 10:41 PM IST
Highlights

தோனி ஓய்வு விவகாரத்தில் பிசிசிஐ தோற்றுவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. அவர் இந்திய அணிக்காக  கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என ஒரு முழுமையான கிரிக்கெட்டராக அனைத்துவகையிலும் தனது பங்களிப்பை வழங்கினார்.

2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை 15 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடிய தோனி, 2019ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் ஓராண்டாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

தோனி ஃபேர்வெல் போட்டியில் ஆடாமல் திடீரென ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, பல முன்னாள், இந்நாள் வீரர்களுக்குமே வருத்தமளிக்கும் விதமாக அமைந்தது. தோனி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி ஏற்பாடு செய்யப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தோனி விஷயத்தில் பிசிசிஐ தோற்றுவிட்டதாக சக்லைன் முஷ்டாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சக்லைன் முஷ்டாக், நான் எப்போதுமே பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே பேசவேண்டும் என்று நினைப்பேன். எதிர்மறையாக பேசமாட்டேன். ஆனால் இதை நான் சொல்லியே தீரவேண்டும். தோனி மாதிரியான ஒரு பெரிய வீரர் இப்படி எளிமையாக ஓய்வுபெற பிசிசிஐ அனுமதித்திருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ தோற்றுவிட்டது. இதை நான் எனது மனதிலிருந்து சொல்கிறேன். தோனியின் லட்சக்கணக்கான ரசிகர்களும் இதையே தான் நினைப்பார்கள் என கருதுகிறேன். நான் இப்படி சொல்வதற்கு பிசிசிஐ என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை. அது எனக்கு வருத்தமளிக்கிறது என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
 

click me!