என் பசங்களுக்கு நான் டிரிங்ஸ் எடுத்துட்டு போறேன்..! இங்கி., கோச் பால் காலிங்வுட்டை பார்த்து பாக்., திருந்தணும்

By karthikeyan VFirst Published Aug 24, 2020, 7:09 PM IST
Highlights

இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பால் காலிங்வுட், களத்தில் ஆடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துச்சென்ற புகைப்படம் செம வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை குவித்துவருகிறது. 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜாக் க்ராவ்லியின் இரட்டை சதம்(267) மற்றும் ஜோஸ் பட்லரின் சதத்தால்(152) முதல் இன்னிங்ஸில் 583 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில், கேப்டன் அசார் அலி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அசார் அலி மட்டுமே மிகச்சிறப்பாக ஆடி சதமடித்தார். ரிஸ்வான் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து தன் பங்கிற்கு அரைசதம் அடித்து 53 ரன்கள் சேர்த்தார். அசார் அலி 141 ரன்களை குவித்ததால், அந்த அணி 273 ரன்கள் அடித்தது. மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த முறை பாகிஸ்தான் வீரர்கள் சுதாரித்து ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகிய இருவரும் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர் ஆகியோரின் பவுலிங்கை சமாளித்து நிதானமாக ஆடிவருகின்றனர். 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 41 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில், களத்தில் ஆடும் இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரும் முன்னாள் கேப்டனுமான பால் காலிங்வுட் டிரிங்ஸ் எடுத்துச்சென்றார். பயிற்சியாளர், முன்னாள் கேப்டன் என்ற ஆணவமெல்லாம் இல்லாமல் தனது வீரர்களுக்கு தான் தண்ணீர் எடுத்துச்சென்றார் காலிங்வுட். 

பென்ச்சில் ரிசர்வ் வீரர்களான மார்க் உட் மற்றும் ஜாக் லீச் ஆகிய இருவரும் இருந்தபோதிலும், தானே டிரிங்ஸ் எடுத்துச்சென்றார் காலிங்வுட். காலிங்வுட்டின் செயல் பாராட்டுக்குரியது. அவர் டிரிங்ஸ் எடுத்துச்சென்ற புகைப்படம், சமூக வலைதளங்களில் செம வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை குவித்துவருகிறது. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்த தொடரின் முதல் போட்டியில் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்சென்றார். அதைக்கண்ட பாகிஸ்தான் முன்னாள், இந்நாள் வீரர்கள் சிலர் மற்றும் சில ரசிகர்கள், முன்னாள் கேப்டனை தண்ணீர் தூக்கவைப்பதா என்று கொந்தளித்தனர். அணியின் பயிற்சியாளரான காலிங்வுட்டே தண்ணீர் எடுத்துச்செல்கிறார். இதில் என்ன கௌரவ குறைச்சல் வந்துவிடப்போகிறது? என்பதை காலிங்வுட்டின் செயல் உணர்த்துகிறது. 

இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரான காலிங்வுட், இதற்கு முன்னர், அணியில் நிறைய வீரர்கள் காயமடைந்த சமயத்தில், ரிசர்வ் வீரர்கள் யாரும் இல்லாத சூழலில் களத்தில் இறங்கி ஃபீல்டிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!