பாகிஸ்தான் கேப்டனை கடைசி வரை வீழ்த்தவே முடியாத இங்கிலாந்து..!

By karthikeyan VFirst Published Aug 24, 2020, 2:35 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் குவித்தார். ஆனாலும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஜாக்  க்ராவ்லியின் இரட்டை சதம்(267), ஜோஸ் பட்லரின் சதத்தால்(152) தான் இங்கிலாந்து அணி 583 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, நட்சத்திர வீரர் பாபர் அசாமும் 11 ரன்களில் அவுட்டாக, பாகிஸ்தான் அணி 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் அசார் அலியும் ஆசாத் ஷாஃபிக்கும் களத்தில் நின்றனர். 3ம் நாளான நேற்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர்.

களத்திற்கு வந்த மாத்திரத்திலேயே ஐந்து ரன்களில் ஆசாத் ஷாஃபிக்கும், 23 ரன்களில் ஃபவாத் ஆலமும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் அசார் அலி நிலைத்து நின்று ஆடினார். 75 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் அசார் அலியுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான், அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். 

ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆர்ச்சர் ஆகியோரின் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிய அசார் அலி, சதமடித்தார். அசார் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பின்னர், சரியாக ஆடாமல் இருந்த நிலையில், முதல் 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், முக்கியமான போட்டியின் முக்கியமான கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 53 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு அசார் அலியும் ரிஸ்வானும் இணைந்து 138 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து அசார் அலியுடன் ஜோடி சேர்ந்த யாசிர் ஷா 20 ரன்கள் அடித்து ஸ்டூவர்ட் பிராடின் பவுலிங்கில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அப்பாஸ் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு சுருண்டது. 

சிறப்பாக ஆடி சதமடித்த பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை கடைசி வரை இங்கிலாந்து பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. பாகிஸ்தானை ஆல் அவுட் செய்வதுதான் முக்கியம் என்பதால், அசார் அலியை ஒருமுனையில் நிறுத்திவிட்டு, மறுமுனையில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. அசார் அலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் குவித்தார். 

இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 310 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்னும் 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியிருப்பதால், இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த 2 நாட்களும் மழை குறுக்கிடவில்லையென்றால், இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
 

click me!