ஒரு ஆளு 11 பேருக்கு சமம்! பிரத்யேக பயிற்சி எடுத்த இங்கிலாந்து பவுலர்கள்.. சக்லைன் முஷ்டாக் பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Jun 14, 2020, 5:28 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக், கோலி ஒருவர் 11 வீரர்களுக்கு சமம் என்று தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவருகிறார்.

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்கிற அளவுக்கு எதிரணிகளை அச்சுறுத்திவைத்துள்ளார். நிறைய பவுலர்களுக்கு கோலியின் விக்கெட் என்பது பெரும் கனவாக இருக்கிறது. ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போன ஆஸ்திரேலிய அணியே, விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யவும் சீண்டவும் பயப்படுகிறது. ஏனெனில் சாதாரணமாகவே, நன்றாக ஆடும் கோலியை சீண்டினால், அதையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு மேலும் சிறப்பாக ஆடுவார். எனவே கோலியை சீண்டுவது தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, இந்திய அணியின் அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கோலியை சீண்டக்கூடாது என்ற மனநிலையில் உள்ளனர். 

அந்தளவிற்கு தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனான கோலி, மனவலிமை பெற்றவர். எனவே தான் அவர் சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்குகிறார். 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த 2018ல் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது, இங்கிலாந்து பவுலர்களுக்கு தான் கூறிய அறிவுரை குறித்து பேசியுள்ளார்.

கோலி குறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், “கோலி ஒருவர் 11 வீரர்களுக்கு சமம். விராட் கோலி ஒருவரின் விக்கெட், ஒட்டுமொத்த இந்திய அணியையே வீழ்த்துவதற்கு சமம் என்று நான் இங்கிலாந்து பவுலர்களிடம் கூறினேன். கோலியை 11 வீரர்களுக்கு நிகராக பார்க்க வேண்டும். ஒரு பவுலராக, நீங்கள்(பவுலர்கள்) உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும், ஆஃப் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் என எந்தவிதமான பவுலிங்கையும் சிறப்பாக ஆடக்கூடிய ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுகிறோம் என்பதை பவுலர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிகமான அழுத்தம் கோலி மீது தான் இருக்கிறது. உலகமே கோலியை உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. அதனால் அவர் மீது அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்பதை மனதில் வைத்து, பந்துவீசுமாறு பவுலர்களுக்கு அறிவுறுத்தினேன். விராட் கோலிக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று பிரத்யேகமாக பந்துவீசி பயிற்சி எடுத்தார்கள். நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதால், கண்டிப்பாக அவருக்கு ஈகோ இருக்கும். அந்த ஈகோவை தொட்டுத்தான் அவரை வீழ்த்த வேண்டும். அவரை சில பந்துகள் ரன் அடிக்கவிடாமல் தடுத்தால், அவர் அடித்து ஆட முயல்வார். கோலி மாதிரியான தரமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மைண்ட் கேம் தான் ஆட வேண்டும்” என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார். 

2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், ஒரு ஒருநாள் போட்டியில் அடில் ரஷீத்தின் லெக் ஸ்பின்னில் ஸ்டம்ப்பை பறிகொடுத்த கோலி, சில நொடிகள் அதிர்ந்து நின்றார். உண்மையாகவே கோலியின் மிக அருமையான விக்கெட் அது. அடில் ரஷீத் அந்த பந்தை அருமையாக வீசி அந்த விக்கெட்டை வீழ்த்தினார். 
 

click me!