அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்கலைனா.. வேற லெவல் தோனியை கிரிக்கெட் உலகம் பார்த்துருக்கும்..! கம்பீர் புகழ்ச்சி

By karthikeyan VFirst Published Jun 14, 2020, 4:20 PM IST
Highlights

தோனிக்கு கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், கிரிக்கெட் உலகம் தோனியின் வியக்கத்தகு ஆட்டத்தை பார்த்திருக்கும். வேற லெவல் தோனியை பார்க்கும் அதிர்ஷ்டத்தை இழந்துவிட்டோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

மகேந்திர சிங் தோனி என்ற பெயர் இந்திய கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலான தாரக மந்திரம். தோனி இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம். 2004ம் ஆண்டு கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் அறிமுகமாகி, அடுத்த மூன்றே ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, அதற்கடுத்த ஒருசில மாதங்களிலேயே டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். 

அதன்பின்னர் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்துவிதமான ஐசிசி தொடர்களையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் தனது கெரியரை தொடங்கிய அடுத்த மூன்றே ஆண்டில் அணியின் கேப்டனாகிவிட்டதால், அணியின் வெற்றியிலும் நலனிலும் மட்டுமே அக்கறை காட்டிய தோனி, அவரது தனிப்பட்ட ரெக்கார்டுகளில் கவனம் செலுத்தவில்லை.

ஒருவேளை அவர் கேப்டனாகவில்லை என்றால், தொடர்ச்சியாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடி, சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்திருப்பார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, ஆரம்பத்தில் சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இதையடுத்து, ஆறாம் வரிசையில் இறங்கி கொண்டிருந்த தோனியை, பாகிஸ்தானுக்கு எதிரான 2005 தொடரில் 3ம் வரிசையில் இறக்கிவிட்டார் அப்போதைய கேப்டன் கங்குலி. அந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த தோனி, 148 ரன்களை குவித்தார். அதற்கடுத்து இலங்கைக்கு எதிரான போட்டி ஒன்றில் 183 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது கெரியரின் ஆரம்பத்திலேயே, ஒருநாள் இன்னிங்ஸில் 183 ரன்களை குவித்த தோனி, தொடர்ந்து அதே பேட்டிங் ஆர்டரில் இறங்கியிருந்தால், அதிகமான ரன்களை குவித்து பெரிய சாதனையாளராக திகழ்ந்திருக்க முடியும். 

ஆனால் அவரிடம் கேப்டன் பொறுப்பு வந்ததும், அணியின் நலனில் அக்கறை செலுத்திய தோனி, கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களை முன்வரிசையில் இறக்கிவிட்டு, அவர் பின்வரிசையில் இறங்க ஆரம்பித்தார். 5-6ம் வரிசைகளில் தான் ஆடினார். அதிலும் சிறப்பாக செயல்பட்டு பெஸ்ட் ஃபினிஷர் என்று பெயர் பெற்றார் தோனி. ஆனால் அவரால் பெரியளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. 

தோனி 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 50.53 என்ற சராசரியுடன் 10,773 ரன்களை குவித்துள்ளார். தோனியிடம் கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், தோனி தொடர்ச்சியாக மூன்றாம் வரிசையிலேயே பேட்டிங் ஆடி சரித்திரம் படைத்திருப்பார் என்றும் வேற லெவல் தோனியை கிரிக்கெட் உலகம் பார்த்திருக்கும் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், கிரிக்கெட் உலகம் ஒரு விஷயத்தை தவறவிட்டுவிட்டது. தோனியின் அபாரமான பேட்டிங் தான் அது.. ஆம்.. தோனி மட்டும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்காவிட்டால், தொடர்ச்சியாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடியிருப்பார். அந்த வரிசையில் அவர் ஆடியிருந்தால், முற்றிலும் வேற லெவலான தோனியின் பேட்டிங்கை நாம் பார்த்திருக்க முடியும். 

மூன்றாம் வரிசையிலேயே அவர் தொடர்ச்சியாக ஆடியிருந்தார் என்றால், இன்னும் நிறைய ரன்களை குவித்து, பல சாதனைகளை தகர்த்திருப்பார். சாதனைகள் என்றாலே தகர்க்கப்படும்; எனவே அது ஒருபுறம் இருந்தாலும், தோனி வியக்கத்தகு வீரராக திகழ்ந்திருப்பார். அவரை பார்த்து இந்த உலகமே வியந்திருக்கும். தற்போது, பவுலிங் அட்டாக்கில் அந்தளவிற்கு தரம் இல்லை. இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் தரம் குறைந்துவிட்டது. அந்த அணிகளுக்கு எதிராகவெல்லாம் மூன்றாம் வரிசையில் தோனி ஆடியிருந்தால், பல சாதனைகளை தகர்த்தெறிந்திருப்பார் என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். 

click me!