வெளுத்து வாங்கணும்.. வெற்றியை பறிக்கணும்.. சஞ்சு சாம்சனின் பேட்டிங் உத்தி

By karthikeyan VFirst Published Nov 28, 2019, 5:30 PM IST
Highlights

இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தயாராகிவரும் நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுவருகிறது. 
 

அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது திறமையை தொடர்ச்சியாக நிரூபித்துவரும் சஞ்சு சாம்சனுக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் அவர் அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. 

வங்கதேசத்துக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்காமல், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பே அளிக்காமல் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே, தவான் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடும்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தனது பேட்டிங் ஸ்டைல் மற்றும் வெரைட்டி குறித்து சஞ்சு சாம்சன் பேசியுள்ளார். தனது பேட்டிங் குறித்து பேசிய சாம்சன், எனக்கு எப்போதெல்லாம் ஆட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பெரிய ஸ்கோர் அடிக்க முனைவேன். எனக்கு 5 இன்னிங்ஸ்களில் ஆட வாய்ப்பு கிடைத்தால், அதில் ஒன்றிரண்டு இன்னிங்ஸ்களில் மிகப்பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும் என்றும் நான் ஆடும் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பேன். சீராக நிலையான ஆட்டத்தை எப்போதும் ஆடுவது என் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்காது. அதனால் அப்படி ஆட வேண்டும் என்று நான் நினைக்கமாட்டேன் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 
 

click me!