கோலியை விட சிறந்த கேப்டனா ஷ்ரேயாஸ்..? அவர மட்டும் ஒரு கேப்டனாவே கன்சிடர் பண்ணல.. முன்னாள் வீரரின் கேப்டன்சி ரேட்டிங்

By karthikeyan VFirst Published May 16, 2019, 11:37 AM IST
Highlights

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் சிறப்பாக ஆடி, பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.

ஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. சிஎஸ்கேவை 3வது முறையாக இறுதி போட்டியில் வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா திகழ்கிறார். அவருக்கு அடுத்து அதிகமுறை கோப்பையை வென்ற கேப்டன் தோனி. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்க்வதோடு, ஐபிஎல்லில் இவைதான் கோலோச்சுகின்றன. 

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் சிறப்பாக ஆடி, பிளே ஆஃபிற்கு தகுதிபெற்று, எலிமினேட்டரில் சன்ரைசர்ஸை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச்சுற்று வரை ஆடியது. ஆனால் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஆனால் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் அணி சிறப்பாக ஆடியது. 

ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான டெல்லி அணி கூட சிறப்பாக ஆட, வழக்கம்போலவே இந்த சீசனிலும் கடும் சோகம் ஆர்சிபிக்குத்தான். ஆர்சிபி கேப்டன் கோலியால் ஒருமுறை கூட அந்த அணிக்கு கோப்பையை வென்றுகொடுக்க முடியவில்லை. முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் ஆடிய ஆர்சிபி அணி, இரண்டாம் பாதியில் சிறப்பாக ஆடினாலும், முதல் பாதியில் அடைந்த தொடர் தோல்விகளால் போதாத புள்ளிகளை பெற்று பிளே ஆஃபிற்கே தகுதிபெறாமல் வெளியேறியது.

இந்நிலையில், முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், இந்த சீசனில் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களை அவர்களது கேப்டன்சியின் அடிப்படையில் மதிப்பீடு செய்து வரிசைப்படுத்தியுள்ளார். தோனிக்கு அதிகபட்சமாக 10க்கு 9 மதிப்பெண்களும் ரோஹித் சர்மாவிற்கு 8 மதிப்பெண்களும் வழங்கியுள்ளார். ரோஹித்திற்கு நிகராக டெல்லி அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் 8 மதிப்பெண்கள் கொடுத்த சஞ்சய், கேன் வில்லியம்சன் மற்றும் அஷ்வின் ஆகிய இருவருக்கும் 7 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். 

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வெறும் 6 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்துள்ளார் சஞ்சய். ஏற்கனவே கோலியின் கேப்டன்சியை காம்பீர் கழுவி கழுவி ஊற்றிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரை விட 2 மதிப்பெண்கள் குறைவாக கொடுத்துள்ளார் மஞ்சரேக்கர். ஸ்மித்திற்கு 6, ரஹானேவிற்கு 5 மதிப்பெண்கள் கொடுத்த மஞ்சரேக்கர், தினேஷ் கார்த்திக்கை கன்சிடர் கூட செய்யவில்லை. 
 

click me!