#IPL2021 ”லெஜண்ட்” என்பதைவிட சிறந்த வார்த்தை ஒன்று இருந்தால், அதுதான் டிவில்லியர்ஸ்..! முன்னாள் வீரர் புகழாரம்

By karthikeyan VFirst Published Apr 10, 2021, 4:13 PM IST
Highlights

ஏபி டிவில்லியர்ஸை பாராட்ட லெஜண்ட் என்பதை விட சிறந்த வார்த்தை வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. சென்னையில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது. 

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் இறங்கினார். தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை சுந்தர் பயன்படுத்தி கொள்ளவில்லை. தொடக்கம் முதலே சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிய சுந்தர், 10 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய அறிமுக வீரர் ரஜாத் பட்டிதார் 8 ரன்னில் பவர்ப்ளேயின் கடைசி பந்தில் போல்ட்டின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலியும் மேக்ஸ்வெல்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 3 வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். கோலி - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பை உடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், பும்ராவை அழைத்துவந்தார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா. அதற்கு பலன் கிடைத்தது. 13வது ஓவரில் கோலியை 33 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா. 15வது ஓவரில் 39 ரன்னில் மேக்ஸ்வெல்லும் ஆட்டமிழக்க, ஷபாஸ் அகமது மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் டிவில்லியர்ஸ் மட்டும் ஒருமுனையில் களத்தில் நின்றதாலும், இலக்கு கடினமானது இல்லை என்பதாலும், டெத் ஓவர்களை பும்ராவும் போல்ட்டும் வீசியபோதிலும் இலக்கை எளிதாக எட்டவைத்தார் டிவில்லியர்ஸ். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டிவில்லியர்ஸ் 3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுபெற்றுவிட்டார். ஐபிஎல்லை தவிர வேறு எந்த தொடரிலும் ஆடாதநிலையிலும், நெருக்கடியான நிலையில், பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆடி ஆர்சிபி அணியை வெற்றி பெற செய்தார். 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் அடித்து ஆர்சிபியை வெற்றி பெற செய்தார் டிவில்லியர்ஸ்.

கிரிக்கெட் தொடர்ச்சியாக ஆடாவிட்டாலும் கூட, அவரது அசாத்தியமான பேட்டிங்கை கண்ட முன்னாள் வீரர்கள் பலரும் அவரை வெகுவாக புகழ்ந்தனர். அந்தவகையில்,  “லெஜண்ட்” என்பதை விட சிறந்த வார்த்தை ஒன்று இருந்தால், அதுதான் டிவில்லியர்ஸ் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!