#ENGvsIND இதை நீங்க செஞ்சே தீரணும் கோலி.. இல்லைனா இந்த தொடர் முழுவதும் முடிஞ்சுது சோலி.! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 31, 2021, 5:08 PM IST
Highlights

விராட் கோலி ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடாமல் விடவில்லை என்றால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதுமே அவர் சொதப்ப நேரிடும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமே அடிக்கவில்லை. 2 ஆண்டுகளாகவே அவர் பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி 2 ஆண்டுகளாக சதமடிக்கமுடியாமல் திணறிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில், இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 24.80 என்ற மோசமான சராசரியுடன் 124 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் மட்டும் அடக்கம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், கோலி நன்றாக ஆடி ஸ்கோர் செய்தாக வேண்டும். ஆனால் கோலியோ ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எல்லாம் விரட்டி விரட்டி அடித்து அவுட்டாகிவருகிறார்.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே விராட் கோலியின் பிரச்னையாக இருப்பது அவரது ஆர்வக்கோளாறு தான். பொதுவாக அவசரப்படாமல் நிதானமாக களத்தில் நிலைத்து நின்று தெளிவாக ஆடக்கூடியவர் கோலி. ஆனால் இந்த தொடரில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அப்படியே விட்டுவிடாமல், அதை விரட்டி சென்று டிரைவ் ஆடமுயன்று விக்கெட்டை இழக்கிறார்.

இந்த தொடர் முழுவதுமாகவே, ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்துகளை விரட்டி அடிக்க முயன்று, ஸ்டம்ப்புக்கு பின்னால் தான் விக்கெட்டை இழந்திருக்கிறார். விராட் கோலியின் பேட்டிங் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜாம்பவான்கள் பலரும், அவர் கவர் ஷாட் ஆடுவதை தவிர்த்தால் பெரிதாக ஸ்கோர் செய்யலாம் என்று அறிவுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை கோலி 2018 சுற்றுப்பயணத்தில் விட்டதைப்போல் விட வேண்டும். அப்படியில்லாமல், விரட்டிச்சென்று ஆடினால், 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை போலவே, இந்த தொடர் முழுவதுமாக படுமோசமாக சொதப்ப நேரிடும் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!