8 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட சமர்த்; தேவ்தத் படிக்கல்லும் அபார சதம்..! கேரளாவுக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Mar 8, 2021, 2:03 PM IST
Highlights

கேரளாவுக்கு எதிரான விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் தொடக்க வீரர்கள் சமர்த் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் அபார சதத்தால், கர்நாடக அணி 50 ஓவரில் 339 ரன்கள் என்ற கடின இலக்கை கேரளாவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. இன்று 2 காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. அதில் ஒரு போட்டியில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு அணிகளும் ஆடிவருகின்றன.

டெல்லியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி, கர்நாடகாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர்கள் சமர்த் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும், இந்த தொடர் முழுவதும் ஆடியதை போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினர்.

சமர்த் - படிக்கல் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 249 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சமர்த் முதலில் சதமடிக்க, அவரை தொடர்ந்து படிக்கல்லும் சதமடித்தார். சமர்த் சதத்திற்கு பிறகும் மிகச்சிறப்பாக ஆட, படிக்கல் சதமடித்த மாத்திரத்தில் 101 ரன்னில் 43வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அபாரமாக ஆடிய சமர்த் 158 பந்தில் 22 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 192 ரன்களை குவித்து 49வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இரட்டை சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் வெறும் 8 ரன்னில் அதை தவறவிட்டார் சமர்த். கடைசியில் அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே 20 பந்தில் 34 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 338 ரன்களை குவித்தது.

339 ரன்கள் என்ற கடின இலக்கை கேரளா அணி விரட்டிவருகிறது.
 

click me!