சாஸ்திரியோட டீமா..? இதுல என்னடா லாஜிக் இருக்கு..? இந்திய அணி குறித்த பனேசரின் கருத்துக்கு சல்மான் பட் பதிலடி

By karthikeyan VFirst Published May 31, 2021, 5:15 PM IST
Highlights

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் அணி என்பதைவிட, ரவி சாஸ்திரியின் அணி என்பதுதான் சரியாக இருக்கும் என்ற மாண்டி பனேசரின் கருத்தை ஏற்காத சல்மான் பட், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் விராட் கோலியும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுமே காரணம்.

சாஸ்திரிக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் விராட் கோலிக்கு நல்ல உறவும் புரிதலும் இல்லாமல் இருந்த நிலையில், ரவி சாஸ்திரியுடன் கோலி நன்றாக செட் ஆகிவிட்டார். சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்தபின்பும், அவரையே தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிக்கவைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன்படி, சாஸ்திரியே தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்கிறார்.

இந்திய அணி 3 விதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், இந்த வெற்றிகளுக்கு ரவி சாஸ்திரியே முக்கிய காரணம் என்றும், இது கோலியின் அணி அல்ல; சாஸ்திரியின் அணி என்றும் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்திருந்தார்.

மாண்டி பனேசரின் கருத்துடன் முரண்படும் சல்மான் பட்,  அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய சல்மான் பட், சிலர் ஏன் இந்திய அணி குறித்து இப்படி பேச வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. விராட் கோலி இந்திய அணிக்காக ஏகப்பட்ட ரன்களை குவித்துள்ளார். அவர் இல்லாமல் ஒரே ஒரு தொடர் இந்திய அணி ஜெயித்ததால், அதை கோலியின் தோல்வியாக பார்க்க முடியுமா? ஒருசில தோல்விகள் இயல்புதான். அதற்காக அவரது பங்களிப்பை நிராகரித்துவிட முடியாது. 

கோலியும் சாஸ்திரியும் எந்தவித பிரச்னையுமில்லாமல் இணைந்து சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். இருவருமே சம மதிப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தவர்கள். இந்திய அணியில் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டுவரும் நிலையில், ஒருவருடைய டீம் என்ற கருத்து எதற்காக கூறப்படுகிறது? அதில் என்ன நோக்கம், லாஜிக் இருக்கிறது என்று சல்மான் பட் விளாசியுள்ளார்.
 

click me!