டிராவிட் பேச்சுக்கு மறுபேச்சு ஏது..? கண்டிப்பா இந்தியாவுக்குத்தான் வெற்றி - ஆகாஷ் சோப்ரா

By karthikeyan VFirst Published May 31, 2021, 4:17 PM IST
Highlights

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ராகுல் டிராவிட் கூறியிருந்த நிலையில், அவரது கருத்துடன் உடன்பட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

இந்திய அணி ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக, 2007ல் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.

நல்ல தயாரிப்புடனும், வலுவான அணியுடனும் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி, 3-2 என டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் கருத்துடன் உடன்பட்டுள்ளார் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, கண்டிப்பாக ராகுல் டிராவிட்டுடன் உடன்படுகிறேன். யார் தான் டிராவிட்டின் கருத்துடன் முரண்படுவார்கள். டிராவிட்டின் கருத்துகளுக்கு எப்போதுமே தனி மரியாதை இருக்கிறது. இந்திய அணி இப்போதெல்லாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் வெற்றி பெறுகிறது. ஆஸ்திரேலியாவில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் அணியிலிருந்து வெளியேறிய போதிலும், அடுத்தகட்ட அணியே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது. 

அப்படியிருக்கையில், முழு பலத்துடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். இந்திய அணி ரோஹித், கோலி, ரஹானே, புஜாரா ஆகிய நால்வரையும் பேட்டிங்கில் அதிகமாக சார்ந்திருக்கிறது.  ரிஷப் பண்ட் எக்ஸ் ஃபேக்டர். ஜடேஜாவுடன் சேர்த்து 5 பவுலர்களுடன் ஆடலாம். இந்திய அணிக்கு இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!