Virat Kohli விராட் கோலியை பிசிசிஐ கொஞ்சம் மரியாதையா நடத்தியிருக்கலாம்..! பாக்., முன்னாள் வீரர் கருத்து

By karthikeyan VFirst Published Dec 11, 2021, 10:48 PM IST
Highlights

விராட் கோலியை பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.
 

2017ம் ஆண்டிலிருந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்துவந்தார் விராட் கோலி. 2017ம் ஆண்டு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து அதிலிருந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார் கோலி. டெஸ்ட் அணியின் கேப்டன்சியை 2014ம் ஆண்டே ஏற்றார் கோலி.

4 ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்திவந்தார் விராட் கோலி. ஆனால் அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை என்பதுதான் பெரும் விமர்சனமாக இருந்துவந்தது. ஆனாலும் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது. 

ஐசிசி டிராபியை ஜெயிக்கவில்லை என்பது காலப்போக்கில் அவருக்கே பெரும் அழுத்தமாக மாறியது. ஐபிஎல்லிலும் அவரது தலைமையில் ஆர்சிபி அணி கோப்பை ஜெயிக்கவில்லை. எல்லாம் சேர்ந்து பெரும் அழுத்தமாக மாற, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் இல்லை. அவர் சதமடித்தே 2 ஆண்டுகல் ஆகிவிட்டன.

இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அதிரடியாக அறிவித்தார். அவரது தலைமையில் டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. 

இதையடுத்து டி20  அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி. டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டபோதே, ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளிவந்துவிட்டது. அந்தவகையில் கடந்த 8ம் தேதி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் ஆடி 65 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்தார். அப்போது பேசிய கங்குலி, இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று விராட் கோலியை பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொண்டோம். கேப்டனை மாற்றும் ஐடியாவே கிடையாது. ஆனால் விராட் டி20 கேப்டன்சியிலிருந்து விலகினார். டி20 அணியை ஒரு கேப்டனும், ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டனும் வழிநடத்துவதை தேர்வாளர்கள் விரும்பவில்லை. எனவே தான் ஒருநாள் அணியின் கேப்டன்சியையும் ரோஹித்திடமே கொடுத்தனர் என்று கங்குலி தெரிவித்தார்.

விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக 48 மணி நேரம் அவகாசம் கொடுத்ததாகவும், அந்த கால அவகாசத்திற்குள் அவர் பதவி விலகாததையடுத்துத்தான், அவர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

அந்த தகவலை கேள்விப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், விராட் கோலியை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், விராட் கோலி 2 நாளுக்குள் கேப்டன்சியிலிருந்து விலக அவகாசம் கொடுத்ததாக ஒரு தகவல் வெளிவந்தது. கோலி நாட்டுக்காக அளித்த பங்களிப்பை மனதில் வைத்து அவரை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம். ஆனால் இந்த முடிவு நல்ல முடிவுதான். ஏனெனில், டி20 மற்றும் ஒருநாள் அணிகள் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் ஆடமுடியாது என்று சல்மான் பட் கூறியுள்ளார்.
 

click me!