நல்லா சாப்பிட்டு சதை போடுப்பா.. அதுதான் உன் எல்லா பிரச்னைக்கும் தீர்வு..! பாண்டியாவிற்கு சல்மான் பட் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Nov 23, 2021, 9:59 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா அனைத்து விதமான ஃபார்மட்டுகளிலும் ஆட, அவர் நன்றாக சாப்பிட்டு சதை போட வேண்டும்; ஃபிட்னெஸில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சல்மான் பட் அறிவுரை கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை. 

ஆல்ரவுண்டராக டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீசாதது விமர்சனங்களுக்கு வித்திட்டதையடுத்து, அடுத்த சில போட்டிகளில் ஒருசில ஓவர்கள் வீசினார். ஆனால் அவரால் முன்புபோல் பந்துவீசமுடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் முழு ஃபிட்னெஸை எட்டாததால், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று முழு ஃபிட்னெஸை பெற்றால் மட்டுமே அவர் இனிமேல் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். 3 விதமான ஃபார்மட்டுகளிலும் நிரந்தர வீரராக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, இன்றைக்கு எந்தவிதமான இந்திய அணியிலும் இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

இந்நிலையில், அவர் மீண்டும் அனைத்து ஃபார்மட்டுகளிலும் ஆட பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், பாண்டியாவை என்சிஏவுக்கு அனுப்பியது நல்ல முடிவு. ஹர்திக் பாண்டியா கொஞ்சம் சதை போட வேண்டும். நல்ல உணவு சாப்பிட்டு, நன்றாக பயிற்சி எடுப்பது மட்டுமே, ஹர்திக் பாண்டியா மீண்டும் 3 விதமான ஃபார்மட்டுகளிலும் ஆடுவதற்கு ஒரே வழி. அவர் இதேபோல் ஒல்லியாக இருந்தால், அவரால் அனைத்து ஃபார்மட்டுகளிலும் ஆடமுடியாது என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
 

click me!