பா11சி திருச்சி அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடந்த போட்டியில் பா11சி திருச்சி அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதையடுத்து கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் களமிறங்கினர். இதில், இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பிரான்சிஸ் ரோகின்ஸ் மற்றும் மணி பாரதி இருவரும் நிலைத்து நின்று ஆடினர். எனினும், ரோகின்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் மணி பாரதி மட்டும் பொறுமையாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே, பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 139 ரன்கள் எடுத்தது.
மணி பாரதி எடுத்த 40: பா11சி திருச்சி 139 ரன்கள் குவிப்பு!
இதையடுத்து 140 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடியது. இதில், விக்கெட் கீப்பர் அமித் சாத்விக் 22 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ஆகாஷ் சும்ரா 10 ரன்களும், மானா பஃப்னா 16 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த கௌசிக் காந்தி சிறப்பாக ஆடி 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 52 ரன்கள் எடுத்துக் கொடுக்க சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 143 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.