#CPL2021 எவின் லூயிஸின் காட்டடியால் அரையிறுதியில் வாரியர்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பாட்ரியாட்ஸ்

By karthikeyan VFirst Published Sep 15, 2021, 4:05 PM IST
Highlights

எவின் லூயிஸின் அதிரடியான பேட்டிங்கால், கரீபியன் பிரீமியர் லீக் அரையிறுதியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயித்த 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற்ற செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தி செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த 2வது அரையிறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாட்ரியாட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 178 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 45 ரன்கள் அடித்தார். பிரண்டன் கிங் மற்றும் சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகிய இருவரும் தலா 27 ரன்கள் அடித்தனர். 

179 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாட்ரியாட்ஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லூயிஸ், இந்த சீசன் முழுவதுமே செம ஃபார்மில் அடி நொறுக்கிவரும் நிலையில், இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 39 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார் லூயிஸ். கேப்டன் ட்வைன் பிராவோ 34 ரன்கள் அடித்தார். லூயிஸின் அதிரடியால் 18வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாட்ரியாட்ஸ் அணி, ஃபைனலில் செயிண்ட் லூசியா கிங்ஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டி இன்றிரவு நடக்கிறது.
 

click me!