#CPL2021 டேவிட் வீஸ் செம பவுலிங்! டிரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய செயிண்ட் லூசியா கிங்ஸ்

By karthikeyan VFirst Published Sep 15, 2021, 3:06 PM IST
Highlights

டேவிட் வீஸின் அபாரமான பவுலிங்கால் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, ஃபைனலுக்கு முன்னேறியது.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரே ஃப்ளட்சர்(4) மற்றும் கார்ன்வால்(0) ஆகிய இருவரும் சொதப்பினர். ஆனால் மார்க் டீயல் அதிரடியாக அடித்து ஆடி ஸ்கோரை அதிவேகமாக உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய டீயல், 44 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ரோஸ்டான் சேஸ் 21 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 36 ரன்களும், டேவிட் வீஸ் 21 பந்தில் 34 ரன்களும் அடித்தனர். கடைசி நேரத்தில் காட்டடி அடித்த டிம் டேவிட், 17 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாச, 20 ஓவரில் 205 ரன்களை குவித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 206 ரன்கள் என்ற கடின இலக்கை டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு நிர்ணயித்தது. 

206 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் 6 பந்தில் 4 ரன் மட்டுமே அடித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைன் அடித்து ஆடி 17 பந்தில் 30 ரன்கள் அடித்தார். நரைனை டேவிட் வீஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் காலின் முன்ரோ, ராம்டின் ஆகிய இருவரும் 206 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டுவதுபோல பேட்டிங் ஆடவில்லை; மந்தமாக பேட்டிங் ஆடினர்.

முன்ரோ, ராம்டின் மந்தமான பேட்டிங்கால் நைட் ரைடர்ஸ் அணியின் ரன் வேகம் எடுக்கவில்லை. முன்ரோ 23 பந்தில் 28 ரன்களும், ராம்டின் 26 பந்தில் 29 ரன்களும் அடித்தனர். டேரன் பிராவோ 16 பந்தில் 25 ரன்கள் அடித்து வஹாப் ரியாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் பொல்லார்டு அடித்து ஆடி 13 பந்தில் 26 ரன்கள் அடித்த நிலையில், அவரையும் டேவிட் வீஸ் வீழ்த்தினார். நரைன், முன்ரோ, பொல்லார்டு ஆகிய மூவரையும் வீழ்த்திய வீஸ், மற்றொரு முக்கியமான வீரரும் நைட் ரைடர்ஸ் அணியின் ஃபினிஷருமான டிம் சேஃபெர்ட்டையும் 6 ரன்னில் வீழ்த்தி செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

டேவிட் வீஸ் அருமையாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, 19.3 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நைட் ரைடர்ஸ் அணி. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

click me!