விஜய் ஹசாரே தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 42 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த விஜய் ஹசாரே தொடர் சாதனைக்கான தொடராக அமைந்துள்ளது.
இந்த தொடரில் தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்களை முறியடித்து, 277 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தார் ஜெகதீசன்.
இந்நிலையில், இப்போது ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 42 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையே நடந்துவரும் காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். கடைசிவரை களத்தில் நின்று 220 ரன்களை குவித்தார் ருதுராஜ். அவரது அதிரடி இரட்டை சதத்தால் 50 ஓவரில் மகாராஷ்டிரா அணி 330 ரன்களை குவித்தது. 331 ரன்கள் என்ற இலக்கை உத்தர பிரதேச அணி விரட்டிவருகிறது.
இந்த போட்டியில் மகாராஷ்டிரா இன்னிங்ஸின் 49வது ஓவரை ஷிவா சிங் வீசினார். அந்த ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி 42 ரன்களை குவித்தார் ருதுராஜ் கெய்க்வாட். முதல் 4 பந்திலும் ருதுராஜ் சிக்ஸர் விளாசினார். 5வது பந்திலும் ருதுராஜ் சிக்ஸர் விளாசினார். ஆனால் அது நோ-பால். அதற்கு வீசப்பட்ட ரீ-பாலில் கிடைத்த ஃப்ரீ ஹிட்டிலும் ருதுராஜ் சிக்ஸர் அடித்தார். கடைசி பந்திலும் சிக்ஸர் அடித்தார். தொடர்ச்சியாக 7 சிக்ஸர்களை விளாசி 42 ரன்களை குவித்து, ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசிய மற்றும் 42 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், பெரேரா ஆகிய வீரர்கள் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியிருக்கின்றனர். ஆனால் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 7 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார்.