யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2ஆவது போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீராங்கனை ஷோஃபி டிவைன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த எல்லீஸ் பெர்ரி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சப்பினேனி மேகனா 44 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் 37 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஷ்ரேயங்கா பாட்டீல் 8 ரன்னும், ஷோஃபி மோலினெக்ஸ் 9 ரன்னும் எடுக்கவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் யுபி வாரியர்ஸ் அணியில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டும், கிரேஸ் ஹாரிஸ், தஹிலா மெக்ராத், ஷோபி எக்லெஸ்டோன் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.