மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் தற்போது நடைபெற்று வரும் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வருகை தந்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று பாலிவுட் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் ஷாருக்கான், வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா, கார்த்திக் ஆர்யன், டைகர் ஷெராஃப் என்று பாலிவுட் பிரபலங்கள் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேற்று தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் கேப்டன் அலீஷா ஹீலி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரையில் 9 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. இதில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை பார்ப்பதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வருகை தந்துள்ளார். கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்தவரான சத்குரு பெங்களூருவில் நடக்கும் போட்டி என்பதாலும், பெங்களூரு அணி விளையாடும் போட்டி என்பதாலும் இந்தப் போட்டியை பார்ப்பதற்கு நேரில் வருகை தந்துள்ளார்.