MIW vs RCBW: த்ரில் வெற்றியோடு இறுதிப் போட்டிக்கு சென்ற ஆர்சிபி – 5 ரன்னில் எலிமினேட் ஆன மும்பை இந்தியன்ஸ்!

By Rsiva kumarFirst Published Mar 15, 2024, 11:03 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே ஷோஃபி டிவைன் 10 ரன்களில் ஹேலி மேத்யூஸ் பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்த ஓவரின் 2.2 பந்திலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களில் நாட் ஷிவர் பிரண்ட் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திசா கசாட் ரன் ஏதும் எடுக்காமலும், ரிச்சா கோஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியானது 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் எல்லீஸ் பெர்ரி மட்டும் நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்தார். அவர், 50 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் மோலினெக்ஸ் 11 ரன்கள் எடுக்க, வார்ஹாம் 18 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், யாஷ்ஸ்திகா பாட்டீயா மற்றும் ஹேலி மேத்யூஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். மேத்யூஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, யாஸ்திகா 19 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் நிதானமாக விளையாடினர்.

இதில் நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் ஹர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த சஜீவன் சஞ்சனா, பூஜா வஸ்த்ரேகர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்த அமெலியா கெர் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுக்க ஆர்சிபி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறிய நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இறுதிப் போட்டிக்கு சென்றது. வரும் 17ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர்:

ஹேலி மேத்யூஸ், யாஷ்திகா பாட்டீயா, நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், சஜீவன் சஞ்சனா, ஹூமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி மோலினெக்ஸ், எல்லிஸ் பெர்ரி, ஷோஃபி டிவைன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வார்காம், திஷா கஸாட், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாகூர் சிங்.

click me!