யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான 11ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 11ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியானது முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனை சப்பினேனி மேக்னா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா உடன் எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எல்லீஸ் பெர்ரி 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.
கடைசியாக வந்த ரிச்சா கோஷ் 21 ரன்கள் சேர்க்க ஆர்சிபி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து 199 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு யுபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் அலீசா ஹீலி மற்றும் கிரன் நவ்கிரே இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
கிரன் நவ்கிரே 18 ரன்களில் ஷோஃபி டிவைன் பந்தில் ஆட்டமிழந்தார். இவருக்கு பின்னால் சமரி அத்தப்பத்து 8, கிரேஸ் ஹாரிஸ் 5, ஷ்வேதா சராவத் 1 ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த கேப்டன் ஹீலி 38 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 55 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா மற்றும் பூனம் கேம்னர் கடைசியில் ஓரளவு ரன்கள் சேர்க்க யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் ஷோஃபி டிவைன், ஷோஃபி மோலினெக்ஸ், ஜார்ஜியா வேர்ஹிராம், ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 3 வெற்றிகளோடு 6 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. யுபி வாரியர்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியோடு 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.