அது மட்டும் நடக்காம இருந்திருந்தா சூப்பர் ஓவரில் நான் பேட்டிங் ஆடியிருக்கமாட்டேன்.. அவருதான் ஆடியிருப்பாரு - ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Jan 30, 2020, 11:59 AM IST
Highlights

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சூப்பர் ஓவரில் ஆடியது குறித்தும் நியூசிலாந்துக்கு எதிராக சூப்பர் ஓவரில் பெற்ற த்ரில் வெற்றி குறித்தும் ரோஹித் சர்மா பேசியுள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடைசி பந்தில் டை ஆனதை அடுத்து, சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை. ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த டெய்லர், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். 47 பந்தில் 95 ரன்களை குவித்திருந்த வில்லியம்சன், கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எஞ்சிய 3 பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதை நியூசிலாந்து வீரர்களால் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ஷமியின் பந்தில் அவுட்டானார் டெய்லர்.

போட்டி டையில் முடிந்ததையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்களை குவித்தது. சூப்பர் ஓவரில் 18 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் ராகுலும் களத்திற்கு வந்தனர். முதல் 4 பந்தில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதனால் கடைசி 2 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோஹித் சர்மா கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

போட்டிக்கு பின்னர் சூப்பர் ஓவர் குறித்தும் த்ரில் வெற்றி குறித்தும் ரோஹித் சர்மா பேசினார். “முதலில் பேட்டிங் ஆடி முடித்ததும், எனது பொருட்களை எல்லாம் எடுத்து பையில் வைத்து மூட்டை கட்டிவிட்டேன். கடைசியில் சூப்பர் ஓவர் ஆட வேண்டியாகிவிட்டது. எனவே வேக வேகமாக சென்று எனது பொருட்களை எல்லாம் பையில் இருந்து எடுத்தேன். அப்போது, ”abdomen guard”ஐ காணவில்லை. அதை மட்டும் சுமார் 5 நிமிடங்கள் தேடினேன். சூப்பர் ஓவர் வரை இந்த போட்டி செல்லும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஒரு கட்டத்தில் நியூசிலாந்து வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்தபோது, எளிதாக வென்றுவிடுவார்கள் என்றுதான் நினைத்தோம். 

சூப்பர் ஓவரை பற்றி சொல்ல வேண்டுமானால், பவுலிங்கில் நமக்கு எந்தவித பிரச்னையுமில்லை. ஏனெனில் பும்ரா இருக்கிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட் மட்டுமல்லாமல் டெத் ஓவர்களை வீசுவதில் அவர் வல்லவர். எனவே சூப்பர் ஓவருக்கென்று தனியாக தயாராக வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அவர் வழக்கமாக எப்படி வீசுவாரோ அதே மாதிரி அசால்ட்டாக வீசிவிடுவார். 

Also Read - டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி செய்த முதல் சம்பவம்.. தன் மீதான கரும்புள்ளியை துடைத்தெறிந்த ரோஹித்

ஆனால் பேட்டிங் அப்படியில்லை. அந்த குறிப்பிட்ட போட்டியில், அந்த குறிப்பிட்ட நாளில் எந்த பேட்ஸ்மேன் நல்ல டச்சில் சிறப்பாக ஆடினாரோ அவர் தான் பேட்டிங் ஆட வேண்டும். அந்தவகையில் இந்த போட்டியில் நான் 60 ரன்களுக்கு மேல் அடித்திருந்ததால் நான் இறங்கினேன். நான் சரியாக ஆடியிருக்கவில்லை என்றால், ஷ்ரேயாஸ் ஐயரோ அல்லது வேறு யாரோத்தான் சூப்பர் ஓவரில் இறங்கியிருப்பார்கள்” என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 
 

click me!