டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி செய்த முதல் சம்பவம்.. தன் மீதான கரும்புள்ளியை துடைத்தெறிந்த ரோஹித்

By karthikeyan VFirst Published Jan 30, 2020, 10:46 AM IST
Highlights

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி, முதல்முறையாக சூப்பர் ஓவரில் ஆடி, அதிலும் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடைசி பந்தில் டை ஆனதை அடுத்து, சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை. ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த டெய்லர், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். 47 பந்தில் 95 ரன்களை குவித்திருந்த வில்லியம்சன், கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எஞ்சிய 3 பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதை நியூசிலாந்து வீரர்களால் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ஷமியின் பந்தில் அவுட்டானார் டெய்லர்.

போட்டி டையில் முடிந்ததையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்களை குவித்தது. சூப்பர் ஓவரில் 18 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் ராகுலும் களத்திற்கு வந்தனர். முதல் 4 பந்தில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதனால் கடைசி 2 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோஹித் சர்மா கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என டி20 தொடரை வென்றது. இந்திய அணி முதன்முறையாக நியூசிலாந்தில் டி20 தொடரை வென்றது. அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சூப்பர் ஓவரில் ஆடுவது முதல்முறை. 

இதற்கு முன்னர் 2007 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டி மட்டுமே, இந்தியா ஆடியதில் டையில் முடிந்த போட்டி. அந்த போட்டியில் போல்டு அவுட் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. சூப்பர் ஓவர் வீசப்படவில்லை. அதன்பின்னர் 13 ஆண்டுகளில் இந்திய அணி ஆடிய ஒரு போட்டி கூட டையில் முடியவில்லை. இந்த போட்டி தான் டையில் முடிந்தது. எனவே இதுதான் இந்திய அணி சூப்பர் ஓவரில் ஆடியது முதன்முறை. முதல்முறை சூப்பர் ஓவர் ஆடியதிலேயே இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரோஹித் சர்மா.

அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவிற்கு தனிப்பட்ட முறையில் ஒரு வீரராக, இதுவரை சூப்பர் ஓவர் சரியாக அமைந்ததில்லை. அவர் இதற்கு முன்னர் ஐபிஎல்லில் இரண்டு முறையும் இந்தியா ஏ அணியில் ஒருமுறையும் சூப்பர் ஓவரில் ஆடியிருக்கிறார். ஆனால் அதில் எதுவுமே ஒரு ரன் கூட அடித்ததில்லை. இந்நிலையில், நான்காவது முறையாக சூப்பர் ஓவரில் ஆடிய ரோஹித் சர்மா 4 பந்தில் 15 ரன்களை விளாசி, இந்திய அணிக்கு மிகச்சிறந்த வெற்றியை தேடிக்கொடுத்து தனது பழைய மோசமான ரெக்கார்டை தகர்த்தெறிந்துள்ளார். 
 

click me!